ஈரோடு காசிபாளையத்தில் ரூ.13 கோடி செலவில் துணை மின்நிலையம்


ஈரோடு காசிபாளையத்தில் ரூ.13 கோடி செலவில் துணை மின்நிலையம்
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு காசிபாளையத்தில் ரூ.13½ கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சீரான மின் வினியோகம் செய்வதற்காக காசிபாளையம் பகுதியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ.13 கோடியே 47 லட்சம் செலவில் துணை மின்நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். ஈரோடு எஸ்.செல்வகுமாரசின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய துணை மின்நிலையத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசும்போது, “புதிதாக அமைக்கப்பட்டு உள்ள துணை மின் நிலையத்தின் மூலம் காசிபாளையம், நல்லியம்பாளையம், கே.கே.நகர், சாஸ்திரிநகர், சென்னிமலைரோடு, ரெயில் நிலையம், முத்தம்பாளையம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தடையற்ற மின் வினியோகம் செய்ய முடியும். இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் மக்கள் பயன்அடைவார்கள். மேலும், தொழில் நிறுவனங்கள், வீடுகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சீரான மின்வினியோகம் செய்யப்படும். இதனால் தொழில் வளர்ச்சி அடையும்”, என்றார்.

விழாவில் பயனாளி சார்பில் காசிபாளையத்தை சேர்ந்த பிரியா பேசும்போது, புதிய துணை மின் நிலையம் அமைத்ததற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு மின்பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் எம்.சந்திரசேகர், ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் ராஜேந்திரன், சாந்தினி, துணை பொது மேலாளர் கே.இந்திராணி, செயற்பொறியாளர்கள் பழனிவேல், சின்னசாமி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, ரா.மனோகரன், ஜெகதீசன், கோவிந்தராஜ், ஜெயராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன், இளைஞர் அணி பகுதி பொறுப்பாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் பகுதியில் ரூ.4 கோடியே 45 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள துணை மின் நிலையத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலமாக ஆயிக் கவுண்டன்பாளையம், பொன்முடி, கள்ளாகுளம், சாவடிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மக்கள் பயன்அடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story