வறட்சியின் பிடியில் கண்ணங்குடி ஒன்றிய கிராமங்கள், நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


வறட்சியின் பிடியில் கண்ணங்குடி ஒன்றிய கிராமங்கள், நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2018 9:45 PM GMT (Updated: 2018-04-25T02:21:13+05:30)

போதிய மழையில்லாமல் கண்ணங்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் அனைத்தும் வறட்சியால் பாலைவனமாக காட்சியளிக்கிறது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டத்தில் சிறிய ஒன்றியமாக இருப்பது கண்ணங்குடி. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 17 கிராம ஊராட்சிகளும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. முற்றிலும் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ள இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் சரிவர நடைபெறவில்லை. பல விவசாயிகள் மாற்று தொழிலுக்கு மாறிவிட்டனர். இருப்பினும் ஒருசில கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் விவசாயிகள் பலரும் கடும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மாற்று தொழிலும் இல்லாததால் அவர்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்தும், கண்ணங்குடி மற்றும் தேவகோட்டை சுற்றுவட்டாரங்களை பொறுத்தமட்டில் வருணபகவான் கருணை காட்டவில்லை என்றே சொல்லலாம். சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் பருவமழையை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் சாவியாகிவிட்டன. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை. தற்போது கண்ணங்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் மழையின்றி விளை நிலங்கள் பாலைவனம் போன்று காட்சியளிக்கிறது. அங்குள்ள தென்னை மரங்கள் வறட்சியால் சாய்ந்துவிட்டன.

மேலும் ஆறு, கண்மாய்கள் தூர்வாரப்படாமல் காணப்படுவதுடன், கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் அவ்வப்போது பெய்யும் மழைநீரையும் கண்மாய்களில் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஊருணிகளும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் காட்சி அளிக்கின்றன. ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு கூட புற்கள் இல்லாத வண்ணம் சில கிராமங்களில் வறட்சியின் கோரமாக உள்ளது. இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ள அனுமந்தங்குடி விருசுழி ஆறு மணல் திருட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே கண்ணங்குடி ஒன்றியத்தை வறட்சி பகுதியாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story