ரெட்டியார்பாளையத்தில் விண்வெளி வீரர் போல உடையணிந்து டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை


ரெட்டியார்பாளையத்தில் விண்வெளி வீரர் போல உடையணிந்து டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 29 April 2018 11:45 PM GMT (Updated: 2018-04-30T05:05:45+05:30)

புதுவை ரெட்டியார்பாளையத்தில் டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விண்வெளி வீரர் போல உடையணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை ரெட்டியார்பாளையம் பொன்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரஜினிபிரகாஷ். புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். தனது வீட்டில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார்.

இந்த கேமராவை தொட்டால் அது ரஜினி பிரகாசின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரியும் வகையில் தொழில்நுட்பம் செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காரைக்குடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது பெற்றோருடன் ரஜினிபிரகாஷ் சென்றார்.

இரவு பயணத்தில் இருந்த போது அவரது செல்போனுக்கு ஒரு குருஞ்செய்தி வந்தது. தூக்கத்தில் இருந்ததால் அதை அவர் அப்போது கவனிக்கவில்லை. நேற்று அதிகாலையில் செல்போனை பார்த்தபோது அதில் குருஞ்செய்தி வந்து இருப்பது தெரியவந்தது. அதுபற்றி தனது நண்பரான லாஸ்பேட்டையை சேர்ந்த அன்பு என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் ரஜினிபிரகாசின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டார். இது குறித்து அவர் ரஜினிபிரகாசிடம் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்பநாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதற்கிடையே ரஜினிபிரகாஷ் புதுவைக்கு விரைந்து வந்தார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது ரஜினிபிரகாஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் விண்வெளி வீரர்கள் போல உடை அணிந்து இருந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. விண்வெளி வீரர்கள் போல் வந்து கைவரிசை காட்டிய அவர் களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதே கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள விஜய் என்பவரின் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அங்கு நகை-பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

Next Story