383 பேருக்கு பணிநியமன ஆணை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்
வடலூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 383 பேருக்கு கலெக்டர் தண்டபாணி பணிநியமன ஆணை வழங்கினார்.
வடலூர்
வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- மகளிர் திட்டம் சார்பில் நேற்று முன்தினம் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமை தாங்கினார். இந்த முகாமில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களிடம் 52 தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 383 பேருக்கு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் தண்டபாணி பணி நியமன ஆணை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், மகளிர் திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் மூலம் வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இயக்கங்கள் மூலமாக வறுமையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் தொழில் சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சிகள், கணினி பயிற்சிகள், ஆயத்த ஆடை பயிற்சிகள், வெல்டிங், எலக்ட்ரீசியன், பிட்டர், ஏசி மெக்கானிக், மருத்துவ செவிலியர், வியாபார உத்திகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இதில் மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் கமல்ராஜ், ரமேஷ்பாபு, மோகன்ரவி, விஜயகுமார், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி திட்ட அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story