குன்னூர் அருகே கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் கரடியால் பக்தர்கள் அச்சம்


குன்னூர் அருகே கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் கரடியால் பக்தர்கள் அச்சம்
x
தினத்தந்தி 5 May 2018 9:30 PM GMT (Updated: 5 May 2018 7:14 PM GMT)

குன்னூர் அருகே கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் கரடியால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

குன்னூர்,

குன்னூர் அருகே ஒதனட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புக்கு மேற்புறம் சிவானந்தா ஆசிரமம் மற்றும் ரங்கநாதர் கோவில் அமைந்து உள்ளது. இதன் மேற்புறம் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இந்தகாட்டில் காட்டெருமை, கரடி, வரையாடு போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஒதனட்டி குடியிருப்புக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் பயிரிட்டு உள்ள காய்கறிகளை நாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வரும் கரடி ஒன்று இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆசிரமம் மற்றும் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் கரடி சுற்றித்திரிந்து வருகிறது. குறிப்பாக கோவில் மண்டபத்தில் வைத்திருந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை அந்த கரடி நாசம் செய்து வருகிறது. கோவில் வளாகத்தில் கரடி நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மாலை நேரத்தில் ஒதனட்டியில் இருந்து ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் தங்கியுள்ள சாதுக்களும் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று காலை 7.30 மணிக்கு கோவில் அருகில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதாக கோவில் பூசாரி ஒதனட்டி கிராம தலைவரான மோகனிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கரடி மற்றும் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story