தென்பெண்ணையாற்றில் மூழ்கி மீனவர் சாவு


தென்பெண்ணையாற்றில் மூழ்கி மீனவர் சாவு
x
தினத்தந்தி 7 May 2018 4:00 AM IST (Updated: 6 May 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி மீனவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்

கடலூர் அருகே உள்ள கண்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அழகானந்தன்(வயது 37). மீனவர். இவருடைய மனைவி ராஜகுமாரி. அரவிந்தன்(5), அனிதா(1½) என்று 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அழகானந்தன், திரும்பி வரவில்லை. நேற்று காலை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் இரவு அழகானந்தன் தென்பெண்ணையாற்றங்கரையோரம் நடந்து சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதனால் அங்கு சென்று கிராம மக்கள் தேட தொடங்கினார்கள். அப்போது அங்கு ஆற்றில் அவர் பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து உடனடியாக ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, அழகனாந்தனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது உடலை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மீன்பிடி தொழில் செய்து வந்த அழகானந்தன், நேற்று முன்தினம் மாலையில் ஆற்றுப்பகுதிக்கு மீன்பிடிக்க சென்று இருக்கலாம் என்றும், அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story