குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்


குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 6 May 2018 4:30 AM IST (Updated: 6 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 842 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள். 22 மாணவ-மாணவிகள் அரசு அறிவித்த உதவித்தொகையை பெற்று தேர்வு எழுதச் சென்றனர்.

நாகர்கோவில்,

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இருந்தும் பலர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் பலருக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 341 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 275 பேருக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களும், கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தேர்வு மையம் 56 பேருக்கும், கொல்லம் தேர்வு மையம் ஒருவருக்கும், எர்ணாகுளம் தேர்வு மையம் 9 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளில் குமரி மாவட்டத்தில் இருந்து 476 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 293 பேருக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களும், 167 பேருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையமும், 16 பேருக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 25 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 5 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 842 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

இதனால் நேற்று முன்தினத்தில் இருந்து வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு தமிழக மாணவர்கள் ரெயில்கள் மற்றும் பஸ்களில் சென்றனர். மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் துணைக்குச் சென்றனர். நேற்று காலையில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா பகுதிகளுக்கு நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் 15-க்கும் மேற்பட்டோர் ரெயில்களில் பயணம் செய்தனர். அதன்பிறகு ஒன்றிரண்டு பேராக சென்றனர். திருவனந்தபுரத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் நேற்று மதியம் பஸ்கள் மற்றும் ரெயில்களில் புறப்பட்டனர்.

இதற்கிடையே வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 ரூபாயும், தேர்வு எழுதச் செல்லும் மாணவருக்கும், அவருடன் செல்லும் ஒருவருக்கும் இரண்டாம் வகுப்பு ரெயில் பயண கட்டணமும் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. பயணக் கட்டணம் மற்றும் உதவித்தொகையை தேர்வு எழுதிவிட்டு வந்தபிறகும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

எனவே அரசு அறிவித்த உதவித்தொகை மற்றும் பயணக் கட்டணத்தை வழங்க வசதியாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் குறைவான எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகள் மட்டுமே நேற்று அரசின் உதவித்தொகையை பெற்றுச்செல்ல வந்திருந்தனர். நேற்று காலையில் இருந்து மாலை வரை 22 மாணவ-மாணவிகளுக்கு அரசு அறிவித்த உதவித்தொகை தலா ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த தொகையை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிருந்தா (மேல்நிலைப்பள்ளி), முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் வேலாயுதன் ஆகியோர் வழங்கினர். பயணக்கட்டணம் தேர்வு எழுதிவிட்டு வந்த பின்னர் பெற்றுச்செல்லுமாறு கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

உதவித்தொகை, பயணக்கட்டணம் பெறாத மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா தெரிவித்தார்.

பெரும்பாலான மாணவர்கள் அரசின் உதவித்தொகை மற்றும் பயணக்கட்டணம் வாங்கிச் செல்லாததால் நாளை (திங்கட்கிழமை) முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story