நிதிதிரட்டி குடிநீர் கிணறு அமைத்த கிராம மக்கள்


நிதிதிரட்டி குடிநீர் கிணறு அமைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 12 May 2018 10:22 AM GMT (Updated: 12 May 2018 10:22 AM GMT)

திருப்புல்லாணி அருகே கருக்காத்தி கிராமத்தில் அரசை எதிர்பார்க்காமல் ஊர்கூடி நிதி திரட்டி தங்களின் உழைப்பாலேயே குடிநீர் கிணறு அமைத்து கிராம மக்கள் தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

கீழக்கரை,

திருப்புல்லாணி அருகே உள்ளது கருகாத்தி கிராமம். சுமார் 100 குடியிருப்புகளை கொண்ட இந்த கிராமமக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல தண்ணீர் கிணறு ஒன்றின் மூலம் தங்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வந்தனர். இந்த கிணறு சில ஆண்டுகளில் வற்றி விட்டதால் தூர்வாரினர்.

ஆனால், அதன்பின்னர் அந்த கிணற்றில் தண்ணீர் உவர்ப்பு மிகுந்த உப்புதண்ணீராக மாறிவிட்டது. இதன்காரணமாக மக்கள் குடிநீருக்காக அவதிஅடைந்து வந்தனர்.

அவ்வப்போது வரும் காவிரி கூட்டுக்குடிநீரை முறைவைத்து பிடித்து சிக்கனமாக பயன்படுத்தி வந்தனர். இதுதவிர, லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டுவரப்படும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி குடித்து வந்தனர்.

தங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி அரசுக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இதன்காரணமாக ஊர்கூடி, கிராம மக்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுக்கு வேண்டிய தண்ணீரை நாமே தேடிக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்த திட்டத்திற்காக கிராமத்தில் பொதுவான இடத்தில் புதிதாக கிணறு தோண்டுவது என்றும்அதற்காக அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி அளிப்பது என்றும் முடிவு செய்தனர். சொல்வதோடு நிற்காமல் அனைவரும் ஒற்றுமையாக நின்று நிதி திரட்டி ரூ.2 லட்சம் வரை நிதி சேர்த்தனர்.

இந்த நிதியை கொண்டு கிராமத்தில் பொதுவான இடத்தில் கிணறு தோண்டும் பணியை கிராம மக்களே யாரையும் எதிர்பார்க்காமல் தொடங்கினர்.

சிறுவர் முதல் பெரியவர் வரை பெண்களும் ஆர்வ முடன் முன்வந்து தங்களால் இயன்ற அளவு உடல் உழைப்பை அளித்து கிணற்றினை உருவாக்கி உள்ளனர். கருக்காத்தி மக்களின் கனவை நனவாக்கும் வகையில் 25 அடி ஆழத்தில் குடிப்பதற்கு ஏற்ற நல்ல தண்ணீர் கிடைத்துள்ளது.

பெரும் முயற்சியின் பயனாக புதிய கிணறு தோண்டி கிராம மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை தேடிபிடித்துஉள்ளனர். கான்கிரீட் சுவருடன் கூடிய வகையில் யாருக்கும் எந்த கமிஷனும் கொடுக்காமல் தரமான முறையில் கிணறு அமைத்து தங்களுக்கு தேவையான தண்ணீரை தாங்களே உருவாக்கி தாகம் தீர்த்துள்ளனர்.

தண்ணீர் தாகத்தை தீர்க்க அதிகாரிகளிடம் மனு கொடுத்து காத்து, காத்துக்கிடந்த கருக்காத்தி கிராம மக்கள் இறுதியில் தாங்களே கிணறு தோண்டி தண்ணீரை கிடைக்க செய்துள்ளது அந்த கிராம மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story