வெறி நாய்கடித்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


வெறி நாய்கடித்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
x
தினத்தந்தி 12 May 2018 10:29 AM GMT (Updated: 12 May 2018 10:29 AM GMT)

மானாமதுரையில் வெறிநாய்கடித்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் உள்ள குண்டுராயர் தெரு, அண்ணாசிலை, அக்ரகாரம், மாரியப்பன் கோவில் தெரு, ரெயில்வே காலனி, செட்டியார் தெரு, நல்ல தம்பி பிள்ளையார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெறி நாய்கள் சுற்றித்திரிகின்றன. நேற்று காலை இந்த பகுதி வழியாக நடந்து சென்ற பொதுமக்களை இந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று விரட்டி, விரட்டி கடித்தது.

இதில் இந்த பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் (வயது55), கண்ணகி(40), பத்மநாபன்(85), தியாகராஜன்(63), குண்டு(43), சந்தியாகு(76), அமுல்ராஜ்(45), ராஜாராம்(54) உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மானாமதுரை பேரூராட்சி அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணியில் அவர்கள் 2 வெறிநாய்களை மட்டுமே பிடித்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மானாமதுரை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் ஏராளமான வெறிநாய்களை பேரூராட்சி நிர்வாகத்தில் பிடித்து அவற்றை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story