மாவட்ட செய்திகள்

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் + "||" + Various development projects in the Panchayat Union

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் கல்லாத்தூர், தென்மலை அத்திப்பட்டு, மேல்பட்டு, புலியூர், அத்திப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய கிராமங்களில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கல்லாத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2017-2018-ம் ஆண்டின் கீழ் விவசாயி விநாயகமூர்த்தி என்பவரது நிலத்தில் அரசு மானியத்துடன் நிழல்வலை குடில் அமைக்கப்பட்டு அதில் 500 பட்டன் ரோஸ் செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் தென்மலை அத்திப்பட்டு கிராமத்தில் சேமன் என்பவரது விவசாய நிலத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலமாக 750 பப்பாளி செடிகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

பின்னர் அவர் மேல்பட்டு கிராமத்தில் வேளாண்மைத் துறை மூலமாக கிருஷ்ணமூர்த்தி என்பவரது 1½ ஏக்கர் விவசாய நிலத்தில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசன திட்டத்தில், விவசாயம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, தென்மலை அத்திப்பட்டு ஊராட்சி, சின்னக்கீழ்பட்டு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும்அவர் சின்னக்கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்த மேல்பட்டு வனத்துறை பள்ளி மாணவர்கள் ரவீந்திரன் (3-ம் வகுப்பு), கவியரசன் (2-ம் வகுப்பு) ஆகியோரின் வாசிப்பு திறன் குறித்து கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் புலியூர் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறை மூலமாக செயல்பட்டு வரும் சாமை அரவை நிலையத்திலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் புலியூர் ஓடையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 13 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட தடுப்பணையையும், கோவிலூர் ஊராட்சி அத்திப்பட்டு கிராமத்தில் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஜமுனாமரத்தூர் ஐ.டி.ஐ கட்டிடத்தையும், தாட்கோ மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆண்கள் தங்கும் விடுதி கட்டிடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் ஜமுனாமரத்தூரில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஜவ்வாதுமலை வட்டார செயல் திட்டம் தயாரிப்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆய்வின் போது மேல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான நீர்மத்தி மரத்தினை பார்வையிட்டு, அதனை சுற்றி அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கைகோர்த்து கலெக்டர் நின்றார்.