உணவுக்கு விலை பணமல்ல.. பாசம்..


உணவுக்கு விலை பணமல்ல.. பாசம்..
x
தினத்தந்தி 13 May 2018 10:27 AM GMT (Updated: 13 May 2018 10:27 AM GMT)

அது கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் ஊர். அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி, ஊருக்கு நல்லது செய்வது எப்படி? என்ற கோணத்தில் சிந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

 அப்போது அவர்களில் ஒருவர், ‘இந்த ஊரில் பசியோடு இருக்கும் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கவேண்டும். உணவை அவர்களது வீடு தேடிச் சென்று தரவேண்டும். யாருக்கு உணவு தேவை என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள். இனி யாரும் பட்டினி கிடக்கக்கூடாது. யாராவது பட்டினி கிடந்தால் நாம்தான் அதற்கு காரணம்..’ என்றார். இத்தனைக்கும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் வசதிபடைத்தவர்கள் இல்லை. நல்ல மனது படைத்தவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் பசித்தவர்களுக்கு உணவு வழங்கினார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பசியாற்றும் சேவை இன்றும் சுவையாக தொடர்ந்துகொண்டிருக்கி றது. தினமும் மதிய உணவு அங்கு 12 மணிக்கு தயாராகிவிடுகிறது. உணவுகளின் மணம் பரவும் அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அங்கு வந்து உண்ணலாம். சாம்பார், பொரியல், கூட்டு, மீன் போன்ற பலவகை உணவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு உணவு பரிமாறும் நேரத்தில் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, உணவு பரிமாறுவதற்கும், அது தொடர்பான உதவிகள் செய்வதற்கும் பலர் ஓடி வருகிறார்கள். அருகில் உள்ள கல்லூரி மாணவ- மாணவிகள் பாத்திரங்களை துலக்கிகொடுக்கிறார்கள்.

தினமும் 700-க்கும் அதிகமானவர்கள் அங்கு மதிய உணவு சாப்பிட வருகிறார்கள். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பணம் கொடுக்க முடியாத ஏழைகள். பாதி பேர் தனது சாப்பாட்டிற்கான பணத்தை மட்டும் கொடுக்கிறார்கள். சிலர் அதிகமாக பணம் வழங்குகிறார்கள். பணத்தை அங்கிருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு சென்றால் போதும். அங்கு யாரும் யாரிடமும் பணம் கேட்பதில்லை.

பாசத்தோடு பசியாற்றும் இந்த அமைப்பு ஆலப்புழை கடற்பகுதியில் உள்ள பாதிரப்பள்ளி என்ற ஊரில் இயங்கிவருகிறது. சி.ஜி.பிரான்சிஸ் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் உருவானது. சி.பி.ஐ.எம். கட்சியின் உள்ளூர் அமைப்பு இதனை இயக்கிவருகிறது.

தினமும் நான்கு நேரம் இங்கு உணவு தருகிறார்கள். காலையில் இட்லி, தோசை, புட்டு போன்றவைகளில் ஏதாவது ஒன்று கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சில நாட்கள் மதிய நேரம் இறைச்சி வழங்குகிறார்கள். இல்லாவிட்டால் மீன் கிடைக்கும். மதிய உணவு மற்றும் தேன் கலந்த டீயும் உண்டு. அந்த பகுதியில் விளையும் நாட்டு காய் கறிகள் அதிகம் சமைத்து பரிமாறப்படுகின்றன. இரவில் கஞ்சி வழங்குகிறார்கள். கூட்டுக்கு பொரியல் அல்லது ஊறுகாய் தருகிறார்கள். ஆவியில் வேகவைத்த பொருட்கள்தான் அதிகம். வறுத்தவைகளோ, பொரித்தவைகளோ, விசேஷ உணவுகளோ கிடையாது. அவைகளை வழங்கினால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் வந்து விடும் என்கிறார்கள்.



தினமும் இரவில் மையத்தை மூடு்ம் முன்பு நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். அன்று எவ்வளவு பணம் பெட்டியில் போடப்பட்டிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கிறார்கள். இருப்பவர்களும், இ்ல்லாதவர்களும் வழங்கிய அந்த நோட்டுகள் பெரும்பாலும் அன்றைய செலவைவிட குறைவாகவே இருக்குமாம். “வரவைவிட செலவு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து சிலர் பண உதவி செய்வார்கள். சிலர் அரிசியும், காய்கறியும் வழங்குவார்கள். தங்கள் பெற்றோரின் நினைவாக உணவு வழங்க விரும்புகிறவர்களும் உண்டு. 100 பேருக்கு உணவு வழங்க, 2 ஆயிரம் ரூபாய் வழங்கினால் போதும். அப்படி பணம் வழங்குகிறவர்களில் பலர் அன்று மற்றவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களோடு உணவும் அருந்தி மகிழ்கிறார்கள்” என்று மையத்தை சேர்ந்தவர்களில் ஒருவரான பைஜூ சொல்கிறார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வெங்காய வியாபாரி, ஒரு நாள் இங்கு வந்து உணவருந்தி யிருக்கிறார். இவர்களது சேவை உணர்வை கேள்விப்பட்டு, தேவையான அளவு பெரிய வெங்காயத்தை தான் தருவதாக கூறியிருக்கிறார். சொல்லியபடியே அங்குள்ள குறிப்பிட்ட கடை ஒன்றுக்கு தவறாமல் அனுப்பிக்கொண்டும் இருக்கிறார்.

இந்த மையம் இயங்குவதற்கான இடத்தை ஒருவர் வழங்கி யிருக்கிறார். இன்னொருவர் அதில் கட்டிடப் பணிகளை பூர்த்திசெய்திருக்கிறார். அங்கு காய்கறி நறுக்குவது, சமைப்பது, சுத்தம் செய்வது போன்ற பணிகளை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள். கம்பெனிகளின் சி.ஈ.ஓ.க்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை போட்டிபோட்டு வேலை செய்து மகிழ்கிறார்கள்.

தினமும் இந்த மையத்திற்கு நிறைய காய்கறிகள் தேவைப்படுகின்றன. அதற்கான செலவை கட்டுப்படுத்துவதற்காக, சொந்தமாக காய்கறித்தோட்டம் நிறுவ விரும்பினார்கள். அதற்கான இடத்தை ஒருவர் வழங்க, அதில் காய்கறிகள், கீரை வகைகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. இயற்கை முறையில் அந்த தோட்டத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் பொருட்களை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். கழிவு நீரை சுத்தி கரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

லாட்டரி சீட்டு விற்கும் தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகள், மனைவியை இழந்தவர்கள்.. போன்ற பலர் தினமும் நான்கு நேரமும் இங்கு உணவருந்த வருகிறார்கள். படுக்கையில் இருந்து எழமுடியாதவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு வீடுகளுக்கு கொண்டு போய் உணவு வழங்குகிறார்கள். அவர்களும் சூடான உணவை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிடவேண்டும் என்பதற்காக ஹாட் பாக்ஸ்களில் உணவை வைத்து, இதற்காக வாங்கி வைத்திருக்கும் வாகனத்தில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். உணவளிப்பது மட்டுமின்றி சலுகை கட்டணத்தில் நோய்களுக்கான பரிசோதனை செய்வது, மனநல சிகிச்சையளிப்பது, மருந்து வழங்குவது போன்ற சேவைகளையும் செய்து வருகிறார்கள்.

இங்கு ஏழைகளுக்கு இன்முகத்தோடு இலவசமாக உணவு தருகிறார்கள். அதை பார்க்கும் சிலர் தங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அப்படியே எடுத்து பெட்டியில் சேர்த்து விட்டு ஆனந்த கண்ணீரோடு விடைபெறுகிறார்கள். 

Next Story