மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை போராட்டம் நடத்த முயற்சி 275 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை போராட்டம் நடத்த முயற்சி 275 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2018 4:30 AM IST (Updated: 16 May 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நேற்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்த முயன்ற 5 பெண்கள் உள்பட 275 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதாகவும், பின்னர் நாகை கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்போவதாகவும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் நாகை அவுரித்திடலில் திரண்டனர். விவசாயிகளின் இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து அவுரி திடலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் போராட்டக்காரர்கள், கடலில் மூழ்கி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்ததால் நாகை புதிய கடற்கரையில் கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டுகள் சின்னசாமி, அசோக்குமார் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது அவுரித்திடலில் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு போதுமான அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்த இருந்ததால், முன்னதாக கடலுக்கு செல்ல சாவு மேள, வாத்தியங்கள் வாசித்தனர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக புறப்பட தயாராகினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளை கைது செய்ய முயன்றனர்.

அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களையும் பிடித்து வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். மொத்தம் 5 பெண்கள் உள்பட 275 பேர் கைது செய்யப்பட்டனர். 

Next Story