சட்டசபையில் முழு மெஜாரிட்டியை பா.ஜனதா நிரூபித்து காட்டும் ஸ்ரீராமுலு பேட்டி


சட்டசபையில் முழு மெஜாரிட்டியை பா.ஜனதா நிரூபித்து காட்டும் ஸ்ரீராமுலு பேட்டி
x
தினத்தந்தி 18 May 2018 4:12 AM IST (Updated: 18 May 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் நாடகமாடுகிறார்கள் என்றும், சட்டசபையில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியை நிரூபித்து காட்டும் என்றும் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நேற்று முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசத்தை கவர்னர் கொடுத்துள்ளார்.

இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்குள் இழுக்க, அக்கட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையில், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பொறுப்பு ஸ்ரீராமுலுவுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும், முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்க வேண்டும் என்று 6½ கோடி மக்கள் விரும்பினார்கள். அதன்படி, பா.ஜனதாவை 104 இடங்களில் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இதற்காக மாநில மக்களுக்கு பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சட்டசபை தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா உள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் நாடகமாடுகிறார்கள்.

அந்த நாடகத்தின் கதாநாயகன் குமாரசாமி என்பதை மக்கள் அறிந்துள்ளனர். அவர்கள் என்னதான் நாடகமாடினாலும் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜனதா தயாராக உள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். அதனால் சட்டசபையில் முழு மெஜாரிட்டியை பா.ஜனதா நிரூபித்து காட்டும். அந்த நம்பிக்கை பா.ஜனதாவுக்கு இருக்கிறது. மெஜாரிட்டியை விட கூடுதலான ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார். 

Next Story