கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 May 2018 11:14 PM GMT (Updated: 19 May 2018 11:14 PM GMT)

ரோஜாப்பூக்களால் ஆன ஜல்லிக்கட்டு காளை, தாஜ்மஹால் உருவங்களுடன் கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது.

கொடைக்கானல்,

ரோஜாப்பூக்களால் ஆன ஜல்லிக்கட்டு காளை, தாஜ்மஹால் உருவங்களுடன் கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 57-வது கோடைவிழா மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதற்கான விழாவுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை முதன்மை செயலாளர் அபூர்வவர்மா வரவேற்று பேசினார். வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திட்ட விளக்கவுரையாற்றினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் ரூ.7¾ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்- அமைச்சர் வழங்கினார். அதேபோல் ரூ.14 கோடியே 85 லட்சம் மதிப்பில் ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டம், ரூ.9 கோடியே 60 லட்சத்தில் முடிந்த 7 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வாழ்த்தி பேசினார்.

இந்த மலர் கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் மலர்கள், அரிய வகை பழங்கள், காய்கறிகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் காய்கறிகளால் செய்யப்பட்ட முதலை, டிராகன் ஆகிய உருவங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. மேலும் அனைத்து துறைகள் சார்பில் கண்காட்சி விளக்க அரங்கு ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நினைவுபடுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, மாட்டு வண்டி ஆகியவை ரோஜாப்பூக்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர சிவப்பு, மஞ்சள், வெள்ளை ரோஜாப்பூக்களால் செய்யப்பட்ட யானை, தோகை விரித்தாடும் மயில், நடனமாடும் மங்கைகள், வாத்திய கருவிகள் இசைக்கும் பெண்கள், தாஜ்மகால் போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தன. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக பார்த்து ரசித்தனர்.

மேலும் மலர் கண்காட்சியையொட்டி பிரையண்ட் பூங்காவில் பலவித வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றை கண்டு ரசிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர் கள், பூக்களுக்கு அருகில் சென்று ஆர்வமுடன் புகைப்படம் மற்றும் ‘செல்பி’ எடுத் துக் கொண்டனர். மேலும் ஏரியில் உற்சாகத்துடன் படகு சவாரி செய்தனர். முடிவில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் நன்றி கூறினார்.

Next Story