துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 11:15 PM GMT (Updated: 23 May 2018 11:13 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று தி.மு.க. சார்பில் என்.எஸ்.கே.வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, திசைவீரன், முத்துராமலிங்கம், நகர் செயலாளர் நாசர்கான், அவை தலைவர் சண்முகம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் வில்லாயுதம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் காந்தகுமார், விவசாய அணி அமைப்பாளர் சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மண்டபம் சம்பத்ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜயகதிரவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு கருணாகரன், சி.ஆர்.செந்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, ஜஸ்டின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோன்று முதுகுளத்தூர் பஸ் நிலைய பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கருணாநிதி, அங்குதன், த.மு.மு.க. நகர் தலைவர் இக்பால் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Next Story