கடலூருக்கு மழைநீர் வடிகால் திட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் அடிக்கல் நாட்டினார்


கடலூருக்கு மழைநீர் வடிகால் திட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 27 May 2018 11:00 PM GMT (Updated: 27 May 2018 7:53 PM GMT)

கடலூருக்கு ரூ.148¾ கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டத்தின் முதல் கட்ட பணிக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் அடிக்கல் நாட்டி நேற்று தொடங்கி வைத்தார்.

கடலூர்,

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலூர் மாவட்டத்தில் பெய்த பெருமழையால் கெடிலம் ஆற்றில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் கெடிலத்தின் கரைகள் உடைந்து கடலூர் நகருக்குள் வெள்ளம் புகுந்ததால் நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் தன்மையை அடிப்படையாக கொண்டு கடலூர் நகருக்கு ரூ.148 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து உள்ளது.

இத்திட்டம் 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. இதன் முதல் கட்ட பணிக்கு ரூ.42 கோடியும், 2-வது கட்டப்பணிகளுக்கு ரூ.28 கோடியே 69 லட்சமும், 3-வது கட்டபணிகளுக்கு ரூ.78 கோடியே 9 லட்சமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதில் முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடலூர் 4-வது வார்டு வில்வநகரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மழைநீர் வடிகால் திட்டத்தின் முதல் கட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,3,4,5,6,7,8,10,11,12,13,14,17,18,19,21 ஆகிய வார்டுகளில் 54.80 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும். 15 மாதங்களில் இப்பணி நிறைவடையும். இதன் மூலம் 16 வார்டுகளில் பெரும் கனமழை பெய்தாலும், மழைநீர் தேங்காமல் வடிந்து விடும். இதன்பிறகு அடுத்த கட்ட பணிகள் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது கடந்த 2013-ம் ஆண்டிலேயே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மத்தியசுற்றுச்சூழல்துறையின் அனுமதியோடு இயங்கி வந்தது. எனினும் கடந்த 8 மாதங்களாக ஆலை ஓடாமல் மூடிக்கிடந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது, ஏனெனில் மக்களின் முடிவு தான் அரசின் முடிவு. தூத்துக்குடி மக்களின் நலனை தமிழக அரசு பாதுகாக்கும் என்றார்.

Next Story