அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் வேல்முருகன் கைது நெய்வேலி போலீசார் நடவடிக்கை


அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் வேல்முருகன் கைது நெய்வேலி போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-31T01:18:43+05:30)

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி கடந்த ஏப்ரல் மாதம் 10–ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி,

தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி கடந்த ஏப்ரல் மாதம் 10–ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகளுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் பேரணியாக வந்து நெய்வேலி கியூ பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன் மீது அரசுக்கு எதிராக பேசியதாக நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன், உடல்நலம் சரியில்லாததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ், அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் நேற்று மருத்துவமனையில் வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்தார்.

கைது நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கேட்ட போது, ‘என்.எல்.சி. நிறுவனத்தை அனுமதியின்றி முற்றுகையிட சென்றதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் கூறி வேல்முருகன் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது வேல்முருகன் கைதாகி இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.


Next Story