கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:55 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடு துறையில் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். வட்ட கிளை தலைவர்கள் ராமதாஸ், ஜெகத்ரட்சகன் (மயிலாடுதுறை), கந்தசாமி (தரங்கம்பாடி), குணசேகரன் (சீர்காழி), சுப்பிரமணியன் (குத்தாலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பழனிவேலு கலந்து கொண்டு பேசினார்.

போராட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில அரசின் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, இத்திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ள மின்வாரியம், போக்குவரத்து, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றை சேர்ந்த ஓய்வூதியர்களையும் சேர்க்க வேண்டும். ஊதியக்குழுவின் குறைகளை, அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு, ஓய்வூதியர்கள் சங்கங்களையும் அழைத்து பேசி 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைவரும் அறியும் வகையில் வெளியிட வேண்டும்.

மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், மத்திய அரசை போல ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் மத்திய அரசின் வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு பொதுச்செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.


Next Story