காவலர் பயிற்சி நிறைவு விழா: பணியின்போது மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் கூடுதல் டி.ஜி.பி. பேச்சு


காவலர் பயிற்சி நிறைவு விழா: பணியின்போது மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் கூடுதல் டி.ஜி.பி. பேச்சு
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-31T01:48:10+05:30)

வேலூரில் நடந்த காவலர் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற கூடுதல் டி.ஜி.பி. சீமாஅகர்வால், பணியின்போது காவலர்கள் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

வேலூர்,

வேலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில், பயிற்சி முடித்த 248 காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். முதன்மைக் கவாத்துப் போதகர் மணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கூடுதல் டி.ஜி.பி. (மாநில குற்ற ஆவண காப்பகம்) சீமாஅகர்வால் கலந்து கொண்டார். அப்போது அவர் பயிற்சியில் கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குச் சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பயிற்சி முடித்து காவல் பணியில் ஈடுபட போகும் உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. உங்களை உங்களது குடும்பத்தினர் இன்று (நேற்று) ஆச்சரியமாக பார்க்கிறார்கள். நம்முடன் வாழ்ந்த மகன் காவல்துறையில் பயிற்சி முடித்து, காவலராக மாறி உள்ளார் என்று பெற்றோர் பெருமைப்படுகிறார்கள். தமிழக காவல் துறை உங்களை வரவேற்கிறது.

இந்தப் பயிற்சி காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம். இதேபோல் வாழ்க்கையில் நீங்கள் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். கற்பதை நிறுத்தி விடக்கூடாது. தற்போது உங்கள் மீது பொறுப்புகள் அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். பணியின் போது, மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். பயிற்சியின்போது பெற்ற உடற்தகுதியை இழந்து விடாதீர்கள். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பயிற்சி முடித்த காவலர்களின் கராத்தே, அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் முதன்மைச் சட்ட போதகர் செல்வி நன்றி கூறினார்.

அதேபோல் வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி மையத்திலும் பயிற்சி முடித்த 289 காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா நடந்தது. காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் சேவியர் பிரான்சிஸ்பெஸ்கி தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா கலந்து கொண்டு பயிற்சியில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கி பேசினார்.


Next Story