பெண்ணை தாக்கிய வழக்கில் கணவன்-மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை தாக்கிய வழக்கில் கணவன்-மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 May 2018 10:15 PM GMT (Updated: 2018-05-31T02:33:30+05:30)

வீரபாண்டியில் சுற்றுச்சுவர் எழுப்பிய தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்-மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்,

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள நல்லராயன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 36). இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஜயா (32). இவர்களுக்குள் நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2.3.2011 அன்று விஜயா தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனியப்பன், சரஸ்வதி ஆகிய 2 பேரும் சேர்ந்து மண்வெட்டியால் விஜயாவை தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் தாக்கினர். இதில் விஜயா பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம்-பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று விஜயா வீடு திரும்பினார்.

இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியப்பன், சரஸ்வதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் சேலம் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 5-ல் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், குற்றம் சாட்டப்பட்ட பழனியப்பன், சரஸ்வதி ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். 

Next Story