மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.300 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.300 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-31T03:01:06+05:30)

சேலம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன்வந்தது. ஆனால் இதை ஏற்க ஊழியர் சங்கங்கள் மறுத்துவிட்டன. ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்காவிட்டால் நேற்று முதல் 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.

அதன்படி, வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகரிலும் பல வங்கிகள் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டன. பின்னர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 600 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நாளையும்(இன்று) தொடரும். எங்களது கோரிக்கையை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை போன்றவை முற்றிலும் முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர். இதற்கிடையில் வேலைநிறுத்தம் போராட்டம் பற்றி தெரியாத வாடிக்கையாளர்கள் சிலர் பணம் எடுப்பதற்காகவும், கணக்கில் பணம் செலுத்துவதற்காகவும் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் பெரும்பாலான இடங்களில் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு நிலவியது. வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர். 

Next Story