விளை நிலத்தில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு: ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்


விளை நிலத்தில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு: ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:15 PM GMT (Updated: 7 Jun 2018 7:09 PM GMT)

திருவாரூர் அருகே விளை நிலத்தில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுத்து வருகிறது. இந்த பணிகளுக்காக விளை நிலங்களில் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் இருந்து அடிக்கடி கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விளை நிலங்களில் பரவுகிறது.

இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கச்சா எண்ணெய் கசிவு காரணமாக மண் வளம் பாதிக்கப்பட்டு நெல் சாகுபடி செய்ய தகுதியற்ற நிலமாக விளை நிலங்கள் மாறி விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு திருவாரூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கூடூர் ஊராட்சி முசக்குளம் பகுதியில் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அச்சம் அடைந்த முசக்குளம் கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பணிகளை மேற்கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் பணிகளை நிறுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story