அரசு கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கை கலந்தாய்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது


அரசு கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கை கலந்தாய்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 6:28 PM GMT)

நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரில் நேற்று என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 21 ஆண்டுகளாக நடத்தி வந்தது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு ஆகும் பயணச் செலவு உள்ளிட்ட செலவினங்கள், வீண் அலைச்சல் போன்றவற்றை அரசு கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை இணையதளம் வாயிலாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் வழியாக நடைபெறும் இந்த கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையத்தில் கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி கடந்த 2-ந் தேதி முடிவடைந்தது. இந்த மையத்தில் 1,129 பேர் பதிவு செய்துள்ளனர். இதுதவிர வேறு இணையதள மையங்களில் இருந்தும் என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த பணியானது வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று சுமார் 800 பேரின் சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு பணி நடந்தது. இதற்காக கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு மாணவர்களாக அழைத்து அவர்களது சான்றிதழை கம்ப்யூட்டர் மூலம் சரிபார்த்து ஒப்புதல் அளித்தனர்.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவடைந்த பிறகு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. கலந்தாய்வின் போது மாணவ-மாணவிகள் அவர்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்யலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது பற்றி வீடியோ மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story