போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிக்கும் கும்பல் வாட்ஸ்–அப்பில் குரூப் அமைத்து தகவல்களை பரிமாறி மோசடி


போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிக்கும் கும்பல் வாட்ஸ்–அப்பில் குரூப் அமைத்து தகவல்களை பரிமாறி மோசடி
x
தினத்தந்தி 8 Jun 2018 10:45 PM GMT (Updated: 8 Jun 2018 7:36 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிக்கும் கும்பல் வாட்ஸ்–அப்பில் குரூப் அமைத்து தகவல்களை பரிமாறி மோசடி செய்து வருகிறது.

கோவை,

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் சிறிய அளவிலான மைக்ரோ கேமராவை மர்ம ஆசாமிகள் பொருத்தி உள்ளனர். அதன் மூலம் அங்கு பணம் எடுத்தவர்களின் ஏ.டி.எம். கார்டு எண்ணை, ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு, போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து அதன் மூலம் 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து மோசடி செய்து உள்ளனர்.

இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் வேறு எந்த ஏ.டி.எம். எந்திரங்களிலாவது இதுபோன்று ஸ்கிம்மர் கருவி, மைக்ரோ கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்கும் கும்பல் குறித்து போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபரிடம் 10–க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த நபர் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் அளித்த தகவலின்பேரில் புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்க ளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் அதிர்ச்சியடைய செய்தது. அதாவது 200–க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து வாட்ஸ்–அப்பில் குரூப் அமைத்து உள்ளனர். அதில் எந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்று பார்த்து அந்த குரூப்பில் தகவல் பரிமாற்றம் செய்வார்கள்.

உடனே ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமராவை மர்ம நபர்கள் நைசாக பொருத்தி விட்டு வந்து விடுவார்கள். இவற்றை கண்காணிப்பதற்காக ஒரு குழு தனி இடத்தில் செயல் படும். அவர்கள் ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண்ணை கண்காணித்து, பெங்களூருவில் உள்ள நபர்களுக்கு தகவல் அனுப்பி வைப்பார்கள். உடனே அவர்கள் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து அனுப்பி வைப்பார்கள்.

இவ்வாறு அந்த கும்பல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது. அந்த கும்பல் தான் கோவையிலும் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, கேமராவை பொருத்தியது தெரியவந்து உள்ளது. எனவே புதுச்சேரியில் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். சிங்காநல்லூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திய 2 பேரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஏ.டி.எம். மையங்களில் இருக்கும் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த கருவியை பொருத்தி இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும்போது ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணித்து மிக கவனமாக பணத்தை எடுக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:–

ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்துகிறார்கள். அவசர கதியில் இந்த கருவியை பொருத்தும்போது சில நேரத்தில் அந்த கருவி அங்கும் இங்கும் ஆட்டம் காணும். எனவே ஏ.டி.எம். கார்டை சொருகும் இடத்தில் வித்தியாசமாக ஏதாவது பொருத்தப்பட்டு இருந்தால் அதில் யாரும் ஏ.டி.எம். கார்டை சொருக வேண்டாம். ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று அவசர கதியில் பணத்தை எடுக்காமல், அந்த எந்திரத்தில் ஏதாவது வித்தியாசமாக கருவி உள்ளதா என்பதை கண்காணித்து பணத்தை எடுக்க வேண்டும்.

அதுபோன்று ரகசிய எண்ணை கண்டுபிடிப்பதற்காக மைக்ரோ கேமரா வைக்கப்படுகிறது. மிக கூர்மை யாக கண்காணித்தால் கேமரா இருப்பதை கண்டுபிடித்து விடலாம். இதுபோன்று கருவியோ அல்லது கேமராவோ பொருத்தப்பட்டு இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேலும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

கோவை மாநகர பகுதியில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் பல ஏ.டி.எம்.களில் காவலாளிகள் கிடையாது. சில மையங்களில் மட்டுமே காவலாளிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏ.டி.எம். குறித்து எவ்வித தகவலும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் சில வங்கிகளில் வங்கி சார்பில் நியமிக்கப்பட்ட காவலாளிகள் இருப்பவர்கள். அவர்களுக்கு வங்கி தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியும். அவர்கள் சிலருக்கு வங்கியில் பணம் எடுக்கும் செலானை நிரப்புவதற்கு உதவியும் செய்வார்கள். அதுபோன்ற காவலாளிகளை ஏ.டி.எம். மையங்களில் நியமித்தால் கவனமாக செயல்படுவார்கள். மேலும் காவலாளி இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு.

எந்த வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம். மையங்களை சென்று பார்வையிடுவது இல்லை. ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் அதை வங்கி அதிகாரிகளால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். எனவே இனியாவது வங்கி அதிகாரிகள் தங்கள் வங்கி சார்பில் வைக்கப்பட்டு உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். மேலும் ஏ.டி.எம். மையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை அந்தந்த வங்கிகளில் இணைத்து ஆய்வு செய்தலே மோசடிகளை எளிதாக தடுக்கலாம். தற்போது சிலர் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்கு ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை அறிவதற்காக அந்த எந்திரத்தை அங்கும் இங்கும் அசைக்கிறார்கள். அத்துடன் கார்டை சொருகும் இடத்தில் சிறிய கம்பியை விட்டு அசைக்கிறார்கள். இதனால் எந்திரம் பழுதாக வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஏ.டி.எம். கார்டும் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story