குழந்தை பெற்ற பெண் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


குழந்தை பெற்ற பெண் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:45 PM GMT (Updated: 8 Jun 2018 8:18 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் இறந்தார். இதைத்தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்காததால் தான் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள்அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை பகுதியை சேர்ந்த மகேஸ்வரி(வயது 21) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து இவர் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மணிமேகலை என்ற தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் பெற்று வந்தார். இந்தநிலையில் 6-ந்தேதி மகேஸ்வரி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என மகேஸ்வரியின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மகேஸ்வரியின் உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு நேற்று முன்தினம் மதியம் மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் டாக்டர்கள் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மகேஸ்வரி மயக்க நிலையில் இருப்பதால் யாரும் தற்போது பார்க்க முடியாது எனக்கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மகேஸ்வரிக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் பணியில் இருந்தவர்கள் உறவினர்களிடம் தெரிவிக்காமல், மகேஸ்வரியை புதுக்கோட்டையில் உள்ள வேறுஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மகேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மகேஸ்வரியின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரியின் உறவினர்கள் நேற்று காலையில் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மணிமேகலை மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மகேஸ்வரியின் உறவினர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்து பிரசவித்த மகேஸ்வரிக்கு உரிய சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் வழங்காததால் தான் மகேஸ்வரி உயிரிழந்து விட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களை கேட்காமல் இறந்த மகேஸ்வரியையும் பிறந்து சில மணிநேரமே ஆன அவரது குழந்தையையும் அவசரஅவசரமாக இரவோடு இரவாக ஊருக்கு அனுப்ப காரணம் என்ன என கேள்விகளை எழுப்பினார்கள்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மகேஸ்வரியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story