ஆய்வக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி


ஆய்வக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 8 Jun 2018 10:15 PM GMT (Updated: 8 Jun 2018 10:15 PM GMT)

ஆய்வக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி லாரி டிரைவரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த கார் டிரைவர்கள் 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா தாண்டானூர் அருகே உள்ள வடக்கு காட்டு கொட்டகையை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது36). இவர் லாரி டிரைவர். ஆத்தூர் தெற்கு உடையாளர்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (58), அதே போன்று தென்னங்குடிபாளையம், அய்யனார்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (40), தெற்கு உடையார்பாளையத்தை சேர்ந்த அரசு (49).

இவர்கள் 3 பேரும் கார் டிரைவர்கள். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து, பாரதிராஜாவிடம், பணம் கொடுத்தால் ஆய்வக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதை நம்பிய பாரதிராஜா கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2016-ம் ஆண்டு வரை 3 தவணைகளில் ரூ.6½ லட்சத்தை 3 பேரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் ஆய்வக உதவியாளர் பணி கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து பாரதிராஜா, 3 பேரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.

அப்போது அவர்கள் தேதி, பெயர் குறிப்பிடாத 6 காசோலைகள் கொடுத்தனர். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று காசோலை திரும்ப வந்து விட்டது. இதைத்தொடர்ந்து கொடுத்த ரூ.6½ லட்சத்தை கேட்ட போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.

அதே போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிராஜா, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், அரசு ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கந்தசாமியை தேடி வருகின்றனர்.

Next Story