மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கி, ஆக்ரோ‌ஷத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர் + "||" + Attack the old man Wild crawl with aggression

முதியவரை தாக்கி, ஆக்ரோ‌ஷத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர்

முதியவரை தாக்கி, ஆக்ரோ‌ஷத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர்
கோத்தகிரியில் முதியவரை தாக்கி, ஆக்ரோ‌ஷத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை வனத்துறையினர் 12 மணிநேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மி‌ஷன் காம்பவுண்ட் பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்த கோத்தகிரி அம்பேத்கார் நகரை சேர்ந்த கந்தையன் (வயது 82) என்ற முதியவரை தாக்கிய காட்டெருமை ஒன்று, பொதுமக்களையும் துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த கந்தையன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர் முருகன், வினோத் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிக்குள் பிறந்து சில நாட்களே ஆன கன்று குட்டியுடன் முதியவரை தாக்கிய காட்டெருமை யாராவது குட்டியை ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஆக்ரோ‌ஷம்துடன் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

இதனால் காட்டெருமையை வனப்பகுதிக்குள் பகல் நேரத்தில் விரட்டுவதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து காட்டெருமை சாலைக்கோ அல்லது வீடுகளுக்கோ வராத வண்ணம் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை சுமார் 4 மணியளவில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் காட்டெருமையை விரட்டுவதற்காக கார்சிலி பகுதியில் கும்பலாக மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகள் கூட்டத்தை பட்டாசு வெடித்து விரட்டியவாறு குட்டியுடன் இருந்த காட்டெருமைக்கு அருகில் கொண்டு வந்தனர். பின்னர் இரவு 8 மணி வரை காத்திருந்து சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி இருபுறமும் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி வைத்தனர். மேலும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெளியே வரவேண்டாம் எனவும், கதவை சாத்தி வெளியில் எரியும் விளக்குகளை அணைக்குமாறு அறிவுறுத்தினர்.

பின்னர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தத்தை காண்பித்தும் காட்டெருமைகள் கூட்டத்துடன் சேர்ந்து ஆக்ரோ‌ஷம்துடன் இருந்த காட்டெருமையையும் விரட்டினர். அப்போது காட்டெருமை குட்டியுடன் நின்றிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது கன்று குட்டியின் கால்கள் தேயிலை செடியில் சிக்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. தாய் காட்டருமை தவறுதலாக, அதன் மீது மிதித்ததால் கன்றுக்குட்டி இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கன்று குட்டியை ஒரு கட்டையில் வைத்து கட்டி, செங்குத்தான இடத்தில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். இதைக் கண்ட தாய் காட்டெருமை மீண்டும் வனத்துறையினரை நோக்கி பாய்ந்து வந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீப்பந்தத்தை காண்பித்தால் அந்த காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. சுமார் 12 மணி நேரம் போராடி காட்டெருமையை குடியிருப்பு பகுதியிலிருந்து வனத்துறையினர் விரட்டினர். இதனால் வனத்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், இறந்த கன்றுகுட்டியின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் புதைக்கப்படும் என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


அதிகம் வாசிக்கப்பட்டவை