பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்


பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிடக்கோரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தொடக்கக்கல்வித் துறையை கலைத்து பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். 1,600 தொடக்கப்பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பு அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஈவேரா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தமிழக தமிழாசிரியர் கழக மாநில தலைவர் மருதவாணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் துரைராஜ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில சட்ட ஆலோசகர் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் பஞ்சாபகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story