திருவொற்றியூரில் லாரிக்கும், கோவில் சுவருக்கும் நடுவில் சிக்கிய வாலிபர் பலி


திருவொற்றியூரில் லாரிக்கும், கோவில் சுவருக்கும் நடுவில் சிக்கிய வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2018 5:15 AM IST (Updated: 10 Jun 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் கால்வாய் மூடி உடைந்து இருந்ததால் அந்த பள்ளத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் சிக்கியதால் சரிந்த லாரிக்கும், கோவில் சுவருக்கும் நடுவில் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது 29). இவர், திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும், பள்ளி தாளாளருடன் வெளியூர் சென்று விட்டு இரவில் திரும்பி வந்தார்.

பின்னர் தனது வீட்டுக்கு செல்வதற்காக நள்ளிரவில் அந்த தெரு முனையில் எல்லையம்மன் கோவில் சுவரையொட்டி நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு நடைபெறும் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கற்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் விரைவு சாலையில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ஒரு லாரி சென்றது.

சாலை வளைவில் திரும்பிய போது, சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் மூடி உடைந்து இருந்ததால் அந்த பள்ளத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனால் லாரி இடதுபுறமாக சரிந்தது.

இதனால் அங்கு நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்த பாலாஜி, சரிந்த லாரிக்கும், கோவில் சுவருக்கும் நடுவில் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கிய அவர், அதே இடத்தில் நின்ற நிலையிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான விழுப்புரத்தைச்சேர்ந்த வெங்கடேசனை(35) கைது செய்தனர்.

Next Story