குடகு மாவட்டத்தில் பலத்த மழை; காவிரியில் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்கள் படகுகள் மூலம் மீட்பு
குடகு மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
குடகு,
குடகு மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
குடகில் கனமழைதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குடகு மாவட்டத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கும் பாகமண்டலா, தலக்காவிரி பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
கலெக்டர் குடியிருப்பு பகுதியில்...தொடர்ந்து 4 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் குடகு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்கள் இருளில் மூழ்கி உள்ளன. போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மடிகேரியில் அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகத்தில் நின்ற 4 மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. இதில் ஒரு மரம், கலெக்டர் ஸ்ரீவித்யா தங்கியுள்ள குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றுபவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அவரும், அவருடைய குடும்பத்தினரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.