சேலையூரில் கார் வாடகை பணம் கேட்டு தந்தை-மகன் கடத்தல் 7 பேர் கைது


சேலையூரில் கார் வாடகை பணம் கேட்டு தந்தை-மகன் கடத்தல் 7 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2018 5:56 AM IST (Updated: 11 Jun 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

காருக்கான வாடகை பணம் கேட்டு தந்தை- மகனை காரில் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் மேற்கு, 2-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் எபினேசர் (வயது 37). இவர், வாடகைக்கு கார் தரும் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம், தாம்பரம் அடுத்த சேலையூர் திருமலை நகர், முதல் பிரதான சாலையைச் சேர்ந்த சயீத் முகமது கபீர் (35) என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கார் ஒன்றை தினசரி வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் காரை எடுத்துச்சென்ற நாட்களில் இருந்து சயீத் முகமது கபீர், காருக்கான வாடகை பணத்தை செலுத்தவில்லை எனவும், காரையும் காட்டாமல் இருந்ததாகவும் தெரிகிறது.

காருக்கான வாடகை பணத்தை தரவேண்டும். இல்லை என்றால் காரையாவது கண்ணில் காட்டவேண்டும் என சாமுவேல் எபினேசர் பலமுறை கூறியும் அதற்கு சயீத் முகமது கபீர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சயீத் முகமது கபீரிடம் இருந்து காரை எடுத்துச் செல்வதற்காக நேற்று முன்தினம் சாமுவேல் எபினேசர் மற்றும் அவருடைய நண்பர்களான கணேசமூர்த்தி (53), சரவணன் (46), அப்துல் துரை (35), ஜெயபிரகாஷ் (28), முகமது அலி (35), முகமது சதாம் (28) ஆகிய 7 பேர் காரில் சயீத் முகமது கபீர் வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் அங்கு கார் இல்லை. இதனால் காருக்கான வாடகை பணத்தையும், காரையும் கொடுத்தால்தான் உங்களை விடுவோம் என்று கூறி சயீத் முகமது கபீரையும், அவருடைய தந்தை ஆரிப் ரகுமானையும் தாங்கள் வந்த காரிலேயே ஏற்றிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரிப் ரகுமானின் மனைவி தாஸ்மீன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு பணம் கேட்டு தனது கணவர் மற்றும் மகனை 7 பேர் காரில் கடத்திச்செல்வதாக கூறினார்.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். உடனடியாக சேலையூர் போலீசார், தாஸ்மீனிடம் விசாரித்தனர். பின்னர் தந்தை-மகனை காரில் கடத்திச் சென்றவர்களுடன் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

அப்போது அவர்கள், “சயீத் முகமது கபீர் எங்களிடம் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துவிட்டு, அதற்கான பணத்தையும் தரவில்லை, காரையும் கண்ணில் காட்டவில்லை. கார் இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறியதால் அவர்கள் 2 பேரையும் அழைத்துச்செல்கிறோம்” என்றனர்.

அதற்கு சேலையூர் போலீசார், “இதுபற்றி போலீசில் புகார் அளிக்காமல் நீங்களே நடவடிக்கை எடுப்பது குற்றம்” என்றனர். இதையடுத்து அவர்கள், தந்தை-மகன் இருவரையும் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார், சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேலையூர் போலீசார் அங்கு சென்று அனைவரையும் சேலையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் சாமுவேல் எபினேசர் மற்றும் அவருடைய நண்பர்கள் என 7 பேர் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், 7 பேரையும் கைது செய்தனர்.

மேலும் காரை வாடகைக்கு கொடுத்த சாமுவேல் எபினேசர் அளித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் சயீத் முகமது கபீர் மீது காரை வாடகைக்கு எடுத்து பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story