தஞ்சையில் நடந்த கலந்தாய்வில் கல்வி அதிகாரிகள் 4 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை


தஞ்சையில் நடந்த கலந்தாய்வில் கல்வி அதிகாரிகள் 4 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை
x
தினத்தந்தி 12 Jun 2018 4:15 AM IST (Updated: 12 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த கலந்தாய்வில் கல்வி அதிகாரிகள் 4 பேருக்கு பணியிட மாறுதல் ஆணைகளை முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலைக்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், மாவட்டத்துக்குள் மாறுதல், ஒன்றியத்துக்குள் மாறுதல் என கலந்தாய்வு நடைபெறுகிறது.

நேற்று காலை வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு, மாவட்டம் மாறுதலும் நடைபெற்றது. மாலையில் வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

நேற்று காலை நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் 13 பேர் கலந்து கொண்டனர். இதில் 4 பேருக்கு கலந்தாய்வில் இடமாறுதல் கிடைத்தது. இதையடுத்து அவர்களுக்கு ஆணைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி வழங்கினார்.

மேலும் கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 6 பேர் அதே இடத்தில் மீண்டும் பணிபுரிவதாக எழுதிக்கொடுத்தனர். 3 பேர் பிற மாவட்டத்தில் இடமாறுதல் பெறுவதற்காக வந்திருந்தனர். 

Next Story