பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்யக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு


பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்யக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Jun 2018 4:15 AM IST (Updated: 12 Jun 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்யக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா கொட்டறைகுன்றை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், கொட்டறைகுன்று கிராமத்தில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு பஸ் வசதி இல்லை. இதனால் நாங்கள் பள்ளிக்கு தினமும் 3½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறோம். இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம். கொட்டறைகுன்று பகுதியில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பாரதீய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் சிவராமன் தலைமையில், ஆலத்தூர் தாலுகா அத்தியூர் கிராம ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், அத்தியூர் கிராம ஊராட்சியில் 50 பேருக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்ட பயனாளியாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது அந்த வீடுகளை கட்டி வருகின்றனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்கு வெள்ளாற்றில் மணல் எடுக்க அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இலவச வீடு கட்டுவதற்கு தேவையான மணலை வெள்ளாற்றில் இருந்து எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனுவை கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்தனர். அதில், பாடாலூர்-சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்தோம்.

அதன்படி பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அதற்கான இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே பாடாலூரில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

Next Story