ரூ.34½ கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாத பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
வங்கியில் வாங்கிய ரூ.34½ கோடி கடனை திருப்பி செலுத்தாத புதிய திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பெருமாநல்லூர்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் புதிய திருப்பூர் பகுதியில் நேதாஜி அப்பேரல் பார்க் என்ற பெயரில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 43 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜெ.மார்க் லைப் ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்ற பனியன் ஏற்றுமதி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளாக மும்பையை சேர்ந்த தினேஷ்கங்கா பிரசாத் ஜெய்ஸ்வால் மற்றும் அவரது மனைவி சுனிதா ஜெய்ஸ்வால் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்கள் மும்பையை சேர்ந்த ஏ.ஆர்.எம். கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.34 கோடியே 65 லட்சத்து 25 ஆயிரத்து 304-ஐ கடனாக பெற்றிருந்தனர். ஆனால் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் திருப்பி செலுத்தவில்லை.
எனவே இது குறித்து அந்த நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத சம்பந்தப்பட்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த திருப்பூர் கோர்ட்டு மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று அவினாசி தாசில்தார் வாணி ஜெகதாம்பாள் மற்றும் அவினாசி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அந்த பனியன் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக அங்கு பெருமாநல்லூர் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அந்த பனியன் நிறுவனத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வங்கியின் வாராக்கடனுக்காக பனியன் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story