எடை அதிகரித்து வந்ததால் அறுவை சிகிச்சை மூலம் பெண் உடலில் இருந்து 23 கிலோ சதை அகற்றம்


எடை அதிகரித்து வந்ததால் அறுவை சிகிச்சை மூலம் பெண் உடலில் இருந்து 23 கிலோ சதை அகற்றம்
x
தினத்தந்தி 12 Jun 2018 8:30 PM GMT (Updated: 12 Jun 2018 3:04 PM GMT)

எடை அதிகரித்து வந்த பெண் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 23 கிலோ சதையை அகற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

தூத்துக்குடி, 

எடை அதிகரித்து வந்த பெண் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 23 கிலோ சதையை அகற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் லலிதா, டாக்டர்கள் ராஜ்குமார், ஏஞ்சல் ஆகியோர் கூறியதாவது:–

எடை அதிரிப்பு

தூத்துக்குடி லயன்டவுனை சேர்ந்தவர் செல்வி(வயது 50). இவருடைய உடல் எடை கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உடல் எடை சுமார் 170 கிலோ வரை அதிகரித்தது. இதன் காரணமாக செல்வியால் இயல்பாக நடமாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அதிகப்படியான சதைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நோயாளியின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு 2 நாட்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை அரங்குக்கு நோயாளியை அழைத்து சென்று எந்த இடத்தில் மயக்கமருந்து செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னென்ன தேவைப்படும் என்பதும் ஆலோசிக்கப்பட்டு செயற்கை சுவாசம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டன.

23 கிலோ சதை அகற்றம்

பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர்கள் ராஜ்குமார், கண்ணன், அருணாதேவி, மயக்க மருந்து டாக்டர்கள் முத்துசெண்பகம், பாலமுருகன், ஏஞ்சல் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து 4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை மூலம், செல்வியின் வயிற்று பகுதியில் இருந்து சுமார் 23 கிலோ சதை அகற்றப்பட்டது.

அதன்பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வயிறு பகுதி முழுமையாக மூடப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மூச்சுத்திணறல், ரத்தக்குழாய்களில் கட்டி ஏற்படுதல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டன. அதற்கு உரிய நிபுணர்கள் மூலம் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. 1½ மாதங்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்தோம். தற்போது அவர் முழு ஆரோக்கியத்துடன் உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாரம் குறைந்தது

இது குறித்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட செல்வி கூறும் போது, ‘நான் அதிக உடல் எடையுடன் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். எடையை குறைப்பதற்காக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றேன். ஆனால் அங்கு உள்ள டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்வரவில்லை. இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். இங்கு உள்ள டாக்டர்கள் நல்ல முறையில் பரிசோதனை செய்து எனக்கு அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். இதனால் நான் 126 கிலோ எடையுடன் நலமாக உள்ளேன். எனக்கு மிகப்பெரிய பாரம் குறைந்து உள்ளது. எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.


Next Story