ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவில்லை என்றால் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் பொறுப்புகளை பார்ப்பது இல்லை என்றும், மாவட்ட திட்ட அலுவலரிடம் அங்கன்வாடி மைய சாவி ஒப்படைக்கப்படும் என்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கன்வாடி மையத்தின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாததை கண்டித்தும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், காலி பணியிடங்களை நிரப்பாததால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஒரு பணியாளர் 3 அல்லது 4 மையங்களில் உள்ள பதிவேடுகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பணிச்சுமை அதிகமாக உள்ளதால் பணியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பலமுறை கலெக்டர், திட்ட அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்றனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பகலா அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story