கர்நாடக பட்ஜெட்டை கண்டித்து ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம்-கைது மங்களூரு கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
கர்நாடக பட்ஜெட்டை கண்டித்து மங்களூரு கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மங்களூரு,
கர்நாடக பட்ஜெட்டை கண்டித்து மங்களூரு கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டம்
2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை நேற்று முன்தினம் முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக பட்ஜெட்டை கண்டித்து நேற்று மங்களூருவில் (தட்சிண கன்னடா மாவட்டம் ) உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவ அமைப்பினர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மாநில அரசுக்கு எதிராகவும், குமாரசாமிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்வித்துறை முற்றிலும் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘கர்நாடக பட்ஜெட் தொடர்பாக மாநில அரசு மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மற்றும் திறமையான மாணவர்களை புறக்கணித்து விட்டது. மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க தவறிவிட்டது.
எஸ்.சி., எஸ்.டி. விடுதிகளை மேம்படுத்தவும், மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகும்’ என்றனர்.
கைது-பரபரப்பு
அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள், போலீஸ் வைத்திருந்த இரும்பு தடுப்பு வேலிகள் மீதும் ஏறி, குறித்து கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாணவ-மாணவிகளை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், மாணவ- மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக கோஷங் களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார், மாணவ-மாணவிகளை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.