காதலிக்க வற்புறுத்தி சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது


காதலிக்க வற்புறுத்தி சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 July 2018 4:30 AM IST (Updated: 7 July 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே காதலிக்க வற்புறுத்தி சிறுமியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தாரமங்கலம்,


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சேலத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த கடைக்கு காக்காபாளையம் அடுத்த அழகப்பம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர் கடையில் வேலை பார்க்கும் சிறுமியிடம் பொருட்களை வாங்குவது போல பேசினார்.

கடையின் வாடிக்கையாளர் என்று கூறி அந்த சிறுமியின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கி உள்ளார். அதன் பின்னர் அடிக்கடி அந்த சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்ட கார்த்திக், தன்னை காதலிக்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தி வந்தார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கார்த்திக், காதலிக்கவில்லை என்றால் உன்னை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று சிறுமிக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார். அவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story