அரியலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


அரியலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்,

அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவு தாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும்.

அதாவது 30.6.2013-க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் இருக்க வேண்டும்.

30.06.2013 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமில்லை. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிகளாக இருத்தல் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ அல்லது சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெறப்படும். எனவே மனுதாரர், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு விண்ணப்பப்படிவம் பெற்றுக்கொள்வதற்கு அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மேற்படி சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story