தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 7:37 PM GMT)

தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம் புகளூர் அம்மா மண்டபத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம் மற்றும் மூலிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.47 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் வசதி மற்றும் குடிநீர் வசதி பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்து, ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்களவை துணை சபாநாயகர் பேசியபோது கூறியதாவது:-

மூலிமங்கலம் நடுநிலைப்பள்ளி வளர்ச்சிக்காக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர் இணைப்பு வசதி, சுற்றுச்சுவர் என பல்வேறு வசதிகளை செய்து தரப்பட்டு வருவது ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியபோது கூறியதாவது:-

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை, கோடை காலங்களில் நீர் மோர் பந்தல்கள், நலிவடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைத்து தருதல், மருத்துவமனைகளுக்கு படுக்கை உள்ளிட்ட தளவாடப்பொருட்களை வழங்குதல், ஊரக பகுதிகளில் குடிநீர் வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பொதுப்பணிகளை செய்து வருகிறது. இன்று கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்திட ரூ.75 ஆயிரம் நிதியுதவியும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சபா ஆராதனைக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் என்பன உள்ளிட்ட மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்த இருப்பதற்கான ஒப்புதல் கடிதங்களும் வழங்கப்பட்டது. இந்த நல்ல திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன், செயல் இயக்குனர் (இயக்கம்) எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story