குடிபோதையில் திரிந்தவரை திருடன் என கருதி பொதுமக்கள் தாக்குதல்
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே குடிபோதையில் திரிந்தவரை மோட்டார்சைக்கிள் திருடன் என்று கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே குடிபோதையில் திரிந்தவரை மோட்டார்சைக்கிள் திருடன் என்று கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் சுற்றித்திரிந்துள்ளார். அவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் திரிந்ததால் பொதுமக்கள் அவரிடம் இங்கு சுற்றித்திரியக்கூடாது என்று கூறி அனுப்பினர். இந்த நிலையில் அன்று இரவு அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் மீது பொதுமக்கள் சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து வேலூர் புதிய பஸ் நிலையத்தையொட்டி பழைய பாலாற்று பாலத்தின் அருகே நேற்று காலை அவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை பார்த்த முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் “காணாமல் போன மோட்டார்சைக்கிளை இவர் தான் திருடியிருப்பார்” என்று கருதி அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் “மோட்டார்சைக்கிள் நான் நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து வேறு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இவர் தான் எனது மோட்டார்சைக்கிளை திருட முயன்றுள்ளார்” என்று கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களும் அவரை தாக்கினர். இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தமுடியவில்லை. இதையடுத்து அவரிடம் இருந்த செல்போனை போலீசார் வாங்கி, அதில் இருந்த ஒரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதில், பொதுமக்களால் தாக்கப்பட்டவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் சென்னை சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் வேலூருக்கு வந்து மதுகுடித்ததும், அவர் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபடவில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story