முன்னாள் டி.ஜி.பி. அறிமுகப்படுத்திய ‘ரொட்டி வங்கி’ திட்டத்துக்கு அமோக வரவேற்பு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயன்பெற்றனர்


முன்னாள் டி.ஜி.பி. அறிமுகப்படுத்திய ‘ரொட்டி வங்கி’ திட்டத்துக்கு அமோக வரவேற்பு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயன்பெற்றனர்
x
தினத்தந்தி 9 July 2018 4:30 AM IST (Updated: 9 July 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. அறிமுகப்படுத்திய ‘ரொட்டி வங்கி’ திட்டத்துக்கு பொதுமக்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயன்பெற்றதாக கூறப்படுகிறது.

மும்பை, 

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. அறிமுகப்படுத்திய ‘ரொட்டி வங்கி’ திட்டத்துக்கு பொதுமக்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயன்பெற்றதாக கூறப்படுகிறது.

‘ரொட்டி வங்கி’ திட்டம்

மும்பை நகரில் பல்லாயிரக்கணக்கானோர் தினமும் 3 வேளை உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் பார்ட்டிகள், விருந்து நிகழ்ச்சிகளில் தினமும் டன் கணக்கிலான உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுவதும் தெரியவந்தது.

இதற்கு தீர்வு காணும் பொருட்டு பணிஓய்வு பெற்ற மராட்டிய முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சிவாநந்தன் என்பவர் ‘ரொட்டி வங்கி’ எனும் திட்டத்தை மும்பையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். தனியார் தொண்டு நிறுவனம், டப்பாவாலாக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், மும்பை நகரில் உள்ள ஓட்டல்கள், விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வீணாகும் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவை கெட்டுப்போகும் முன்பாக 1 முதல் 1½ மணிநேரத்தில் உணவு தேவைப்படும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

மீதமாகும் உணவுப்பொருட்களை சேகரிப்பதற்காகவே ஜி.பி.ஆர்.எஸ். வசதிகொண்ட 2 வேன்கள் மற்றும் 24 மணிநேர தொலைபேசி சேவை ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் இடையே ஆதரவு பெருகி வருகிறது.

திருமண நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகளில் உணவுப்பொருட்கள் வீணாக நேர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ‘ரொட்டி வங்கி’யை தொடர்பு கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுவரையில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் ‘ரொட்டி வங்கி’ மூலம் பயனடைந்து இருப்பதாக சிவாநந்தன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நமது நகரில் ஒருபக்கம் ஓட்டல்கள், விருந்து நிகழ்ச்சிகளில் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகிறது. அதேநேரத்தில் பலர் உணவின்றி வெறும் வயிற்றோடு இரவு தூங்கச்செல்கின்றனர். ஏழை மக்களின் பசியை போக்குவதே எங்களின் அடிப்படை லட்சியம். சாலையோர குழந்தைகளின் பசியை போக்குவதே அவர்களை குற்றச்செயல்களில் இருந்து தடுக்கும் வழி’ என்றார்.

Next Story