திருச்சி காந்திமார்க்கெட்டில் வியாபாரிகள்-தொழிலாளர்கள் மீண்டும் மோதல்


திருச்சி காந்திமார்க்கெட்டில் வியாபாரிகள்-தொழிலாளர்கள் மீண்டும் மோதல்
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 6:42 PM GMT)

திருச்சி காந்திமார்க்கெட்டில் வியாபாரிகள்-தொழிலாளர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்-ஜெயில் ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த மாதம் 3-ந் தேதி முதல் பழைய பால்பண்ணை அருகே புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட வெங்காயமண்டியில் ஏற்கனவே வேலை பார்த்து வந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. வெங்காய கமிஷன் மண்டி வியாபாரிகள் லாரிகளில் வரும் சரக்குகளை இறக்கி, ஏற்றுவதற்கு புதிதாக தொழிலாளர்களை நியமித்து கொண்டனர்.

இதனால் பழைய வெங்காயமண்டியில் பணியாற்றி வந்த 277 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எல்.எல்.எப்., டி.யு.சி.சி. ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டத்தில், புதிய வெங்காயமண்டியில் வேலை கேட்டு போராடி வரும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக காந்திமார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழங்கள், தேங்காய், மாங்காய், நாட்டுக்காய்கறிகள் உள்பட அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வெளியூர்களில் இருந்து லாரிகளில் காந்திமார்க்கெட்டுக்கு வந்த காய்கறி சரக்குகளை சுமைப்பணி தொழிலாளர்கள் இறக்கவில்லை. இதனால் சரக்குகள் இறக்கப்படாமல் தேக்கம் அடைந்தன. ஒரு சில லாரிகளில் இருந்து சரக்குகளை வியாபாரிகள் தங்களது கடைகளில் வேலை செய்யும் ஆட்களை வைத்து இறக்க முயன்றனர். ஆனால் சுமைப்பணி தொழிலாளர்கள் அவர்களை இறக்கவிடாமல் தடுத்தனர். இதனால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். ஆனால் தொழிலாளர்கள் தரப்பில், புதிய வெங்காயமண்டியில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை அப்புறப்படுத்தி விட்டு, ஏற்கனவே பணியாற்றி வந்த சுமைப்பணி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் மட்டுமே எங்களது போராட்டம் முடிவுக்கு வரும் என கூறி விட்டனர். இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய காந்திமார்க்கெட்டில் சரக்குகள் இறக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை காந்திமார்க்கெட்டுக்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு லாரிகளில் இறக்கப்படாமல் இருந்த சரக்குகளை வியாபாரிகளே இறக்க முயன்றனர். அப்போது அங்கு கூடி நின்ற சுமைப்பணி தொழிலாளர்கள் நாங்களே சரக்குகளை இறக்குகிறோம் என்று லாரியில் இருந்து இறக்க முயன்றனர். ஆனால் வியாபாரிகளோ தொழிலாளர்களிடம் “நேற்று முன்தினம் சரக்குகளை இறக்க வரவில்லையே, இப்போது மட்டும் ஏன் இறக்க வருகிறீர்கள்? நாங்களே இறக்கி கொள்கிறோம்“ என்று தொழிலாளர்களை சரக்குகளை இறக்குவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அங்கு வியாபாரிகள் தரப்பிலும், தொழிலாளர்கள் தரப்பிலும் ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் உதவி கமிஷனர் அருள்அமரன், காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் சரக்குகளை இறக்க முயன்ற சுமைப்பணி தொழிலாளர்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் இரு தரப்பினரையும் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் இரு தரப்பிலும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் தரப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மார்க்கெட் ஹக்கீம் உள்பட 11 பேரும், தொழிலாளர்கள் தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, தொ.மு.ச. ராமலிங்கம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறுகையில், “பழைய பால்பண்ணை அருகே புதிதாக திறக்கப்பட்ட வெங்காய மண்டியில் ஏற்கனவே பணியாற்றி வரும் சுமைப்பணி தொழிலாளர்கள் 277 பேருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறி இருக்கிறார்கள். இதனை ஏற்று எங்களது வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். எங்களுடைய கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்“ என்று கூறினார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு நிருபர்களிடம் கூறியதாவது:- “வெங்காயமண்டி வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் காந்திமார்க்கெட்டில் ஒட்டுமொத்த சரக்குகளை இறக்கமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் வியாபாரிகள் அனைவரும் ஒன்றுகூடி துணை கமிஷனரை சந்தித்து பேசினோம். இனி போராட்டம் நடத்த மாட்டோம் என்று தொழிலாளர்கள் தரப்பில் உறுதி அளித்து இருப்பதாக கூறினார்கள்.

அப்படி மீறி நடத்தினால் வியாபாரிகள் விரும்பும் ஆட்களை வைத்து வேலை செய்து கொள்ளட்டும் என்றும் கூறி உள்ளனர். கடந்த சில நாட்களாக வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இதேநிலை நீடித்தால் எங்கள் தொழிலை காக்க வியாபாரிகளாகிய நாங்களே சரக்குகளை இறக்கி, ஏற்றும் பணியில் ஈடுபடுவோம். ஆகவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு நல்லபடியாக தொழில் நடக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து காந்திமார்க்கெட்டில் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டனர். இதற்கிடையே மோதல் சம்பவம் தொடர்பாக வியாபாரிகள் தரப்பிலும், தொழிலாளர்கள் தரப்பிலும் தனித்தனியாக காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story