பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்க முடியாது - நாராயணசாமி திட்டவட்டம்
பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்க முடியாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையும், அதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி அளித்த பதிலும் வருமாறு:–
அன்பழகன்: புதுச்சேரி சட்டசபையின் ஆயுட்காலம் 2021 வரை உள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என செய்திகள் வருகிறது. அதுபோல் இந்திய தேர்தல் ஆணையமும் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கருத்தினை கேட்டு வருகிறது. இந்தநிலையில் இப்போதுள்ள சட்டமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத்தோடு சட்டசபைக்கும் தேர்தல் வரும் என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் மனஉளைச்சலுடன் சரிவர ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களின் நிலையை தெரிவிக்கும் விதத்தில் சட்டசபையில் தீர்மானம் இயற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அரசு சார்பில் அனுப்ப முதல்–அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் ஆண்டுக்கு இருமுறை அதாவது பிப்ரவரி மற்றும் மே மாதம் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் உத்தரவு மாணவர்களின் நலனுக்கு எதிரானது. இதை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறது. இந்த முடிவினை புதுச்சேரி அரசு ஏற்கக்கூடாது.
நாராயணசாமி: நீட் தேர்வினை ஆண்டுக்கு 2 முறை எழுதுவது என்பதை ஏற்க முடியாது. ஆண்டுக்கு 2 முறை எழுதினாலும் ஒருமுறைதான் படிப்பில் சேர முடியும். அதனால் பலனில்லை. இதனால் கோச்சிங் சென்டர்கள் பணம் சம்பாதிப்பதற்குதான் வழி கிடைக்கும். ஆன்லைன் தேர்வு எழுத கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சிதர கால அவகாசம் தரவேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்ததும் பதில் கடிதம் எழுதுவேன்.
அதேபோல் பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்று அறிவித்தனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகரத்திலிருந்து கடிதமும் வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன். இது நடைமுறைக்கு ஒத்துவராதது. ஒரு மாநிலத்தில் ஒரே வருடத்தில் சட்டமன்றம் கலைந்துவிட்டால் 4 வருடம் ஜனாதிபதி ஆட்சி என்பது நடத்த முடியுமா? அதேபோல் பாராளுமன்றம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா? வேண்டுமானால் இடைத்தேர்தல்களை வேண்டுமானால் வருடத்துக்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக நடத்தலாம். மத்திய அரசின் இந்த முடிவினை எந்த மாநிலமும் ஏற்காது. உத்திரபிரதேசத்துக்கு தேர்தல் நடத்த பாரதீய ஜனதா தயாராக உள்ளதா? இதுதொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றுவோம்.