மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில் புதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா + "||" + The villagers demanded permission to use the new toad in the temple festival

கோவில் திருவிழாவில் புதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா

கோவில் திருவிழாவில் புதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா
கோவில் திருவிழாவில் புதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முருக்கன்குடி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர்.


இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மதுரையை தலைமை இடமாக கொண்ட ஒரு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த முகவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அந்த தனியார் நிதி நிறுவனம் மாதத்தவணையாக 5 வருடம் வாடிக்கையாளர்களான பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து கொடுத்தால், முடிவில் நிலமாகவோ, பணமாகவோ வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தனர்.

அதனை நம்பி முகவர்களாகிய நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து கொடுத்தோம். ஆனால் வழக்கு சம்பந்தமாக அந்த நிதி நிறுவனத்தின் சொத்துகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது. ஆனால் முகவர்களாகிய நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து கொடுத்த பணத்தை அந்த நிதி நிறுவனம் திருப்பி தரவில்லை.

இதனால் வாடிக்கையாளர்கள் எங்களிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முகவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா எறைய சமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்தவரும், கல்பாடி கிராம பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவருமான மணி என்பவர் மீது மருவத்தூர் போலீசார் பொய் வழக்கு போட்டு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மணி மீது பொய் வழக்கு போட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மதியம் 2 மணியளவில் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சார்பில் அம்மன் கோவிலுக்கு தேர் திருவிழா நடத்துவதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து புதிய தேர் செய்யப்பட்டது. அந்த தேரை ஏதோ காரணத்திற்காக அம்மன் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். தற்போது எங்கள் பகுதியில் நாங்கள் சேர்ந்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் அந்த புதிய தேரை பயன்படுத்துவதற்காக, கடந்த சில நாட்களாகவே போலீசாரிடம் அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் புதிய தேரை பயன்படுத்தி கோவில் திருவிழாவை நடத்துவதற்கு போலீசார் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

எனவே உடனடியாக தேர் திருவிழா நடத்துவதற்கு அனுமதி பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது போலீசாரை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இது சம்பந்தமாக ஒரு மனுவை கலெக்டரிடம் கொடுத்து விட்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு குமரவேலு தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கலெக்டர் அழகிரிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர் இப்போது தான் மனு கொடுத்திருக்கிறீர்கள் என்றும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் கிராம மக்கள் தர்ணாவை தொடர்ந்தனர். இதையடுத்து போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில், போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 15 நாட்களில் கோவில் தேர் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் 5 மணி நேரம் நடத்திய தர்ணா போராட்டத்தை கைவிட்டு முருக்கன்குடி கிராம மக்கள் இரவு 7 மணியளவில் கலைந்து சென்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...