என்.ஜி.ஓ.காலனி அருகே காரை திருடி விற்ற மாணவர் உள்பட 2 பேர் கைது


என்.ஜி.ஓ.காலனி அருகே காரை திருடி விற்ற மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 10:15 PM GMT (Updated: 10 July 2018 4:49 PM GMT)

என்.ஜி.ஓ.காலனி அருகே காரை திருடி விற்ற ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

என்.ஜி.ஓ. காலனி அருகே சீயோன்புரத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் ஞானசிகாமணி (வயது 40). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் அந்த கார் திருடப்பட்டிருந்தது.

இதுபற்றி ஜஸ்டின் ஞானசிகாமணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காரை திருடி சென்ற நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பறக்கை சந்திப்பில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வில்லுக்குறியை அடுத்த வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்த ஆனந்த் (வயது 20), கொன்னக்குழி விளையை சேர்ந்த அஜித் (19) என்பது தெரிய வந்தது. இருவரும் ஜஸ்டின் ஞானசிகாமணியின் காரை திருடி மார்த்தாண்டம் பகுதியில்  உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களில் அஜித் ஐ.டி.ஐ. மாணவர் ஆவார். கைதான இருவரும் ஏற்கனவே கடந்த மாதம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு  பஸ் கண்டக்டர் வீட்டில் காரை திருடி ரூ.5 ஆயிரத்துக்கு விற்க முயன்றபோது, கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story