நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை சாலைப்பணியாளர்கள் முற்றுகை
திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை சாலைப்பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய சாலைப்பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்து இருப்பதை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், சங்க நிர்வாகிகள் 4 பேரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவேண்டும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், புதுக்கோட்டை கோட்டப்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஜூலை 10–ந்தேதி திருச்சி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஒன்று கூடி பின்னர் ஓயாமரி சுடுகாட்டுக்கு சென்று பிணத்திடம் மனு கொடுப்பது என முடிவு செய்து இருந்தனர்.
இதன்படி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை சாலைப்பணியாளர்கள் ஏராளமானவர்கள் கூடினார்கள். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து இருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய அவர்கள் அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஓயாமரி சுடுகாட்டுக்கு சென்று பிணத்திடம் மனு கொடுக்கும் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் மாநில தலைவர் அம்சராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் பாசுப்பிரமணியன், மாநில நிர்வாகிகள் மகேந்திரன், கோதண்டபாணி, திருச்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து கண்காணிப்பு பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கண்காணிப்பு பொறியாளர் அளித்த உறுதிமொழியை ஏற்றி சாலைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர்.