மாவட்ட செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை + "||" + Agricultural workers demand to provide free home pump strap for standby

விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
கும்பகோணம், பாபநாசத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய தலைவர்கள் நாகமுத்து, தர்மையன், கலா, கும்பகோணம் ஒன்றிய பொருளாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில செயலாளர் ஸ்டாலின், மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் சின்னை பாண்டியன், பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர்கள் ஜேசுதாஸ், பழனிவேலு, கும்பகோணம் நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் உடனடியாக வீட்டு மனைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். பல ஆண்டு காலமாக கோவில், மடம், அறக்கட்டளை, தரிசு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். வீட்டு மனை வழங்கவும், சுடுகாட்டு பாதை அமைக்கவும், தையல் எந்திரங்கள் வழங்கவும் வருவாய்த்துறை மூலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக விவசாய தொழிலாளர்கள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தாசில்தார் வெங்கடாசலத்திடம் அளித்தனர்.

அதேபோல பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர்கள் கோபாலன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பாபநாசம் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள், மாநில செயலாளர் பழனிசாமி, மாநில குழு உறுப்பினர் மாலனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், பாபநாசம் நகர செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜிடம், விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார், கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அப்போது துணை தாசில்தார்கள் செல்வராஜ், தர்மராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் அன்பரசு, ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.