திருச்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மலைக்கோட்டை, தெப்பக்குளம் ரூ.45 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது


திருச்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மலைக்கோட்டை, தெப்பக்குளம் ரூ.45 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 8:05 PM GMT)

திருச்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மலைக்கோட்டை மற்றும் தெப்பக்குளம் ரூ.45 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது. செயற்கை நீரூற்று, வரலாற்றை விளக்கும் காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது.

திருச்சி,

மத்திய அரசின் சீர் மிகு நகரம் எனப்படும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்துவதற்கு திருச்சி மாநகராட்சி கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் திருச்சி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நவீனப்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும் மத்திய அரசு ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. திருச்சி நகரின் அடையாளமான மலைக்கோட்டையை மையப்பகுதியாக வைத்து 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த நவீன திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இது தொடர்பாக திருச்சி தனி அதிகாரி மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதல் பணியாக சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக மலைக்கோட்டை, மற்றும் தெப்பக்குளம் ஆகியவை ரூ.45 கோடியில் நவீனப்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக குழு வழங்கிய விரிவான திட்ட அறிக்கைக்கு ஸ்மார்ட் சிட்டி உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இனி தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டதும் டெண்டர் விடப்பட்டு 3 முதல் 6 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும்.

கரிகால்சோழனால் வெட்டப்பட்ட தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று மற்றும் ஒளி விளக்குகள் அமைக்கப்படும். தெப்பக்குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும். தெப்பக்குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்படும்.

மலைக்கோட்டையை பல்வேறு கால கட்டங்களில் சோழர், பல்லவர், நாயக்க மன்னர்கள், சுல்தான்கள், பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பல்வேறு பணிகளை செய்து இருக்கிறார்கள். யுத்த காலங்களில் இது ஒரு ஆயுத கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வரலாறுகளை எல்லாம் விளக்கும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படும். ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட இடம் புராதன பூங்காவாக மாற்றம் செய்யப்படும். மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோட்டை நுழைவு வாயில் (மெயின்கார்டு கேட்) நவீனப்படுத்தப்படும். குழந்தைகள் அமர்ந்து விளையாடுவதற்கான பூங்காவும் உருவாக்கப்படும். சத்திரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்வதற்காக ஒரு நவீன வளாகமும் கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகர பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள் செல்வம், கண்ணன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் மலைக்கோட்டை மற்றும் தெப்பக்குளம் பகுதிகள் எவ்வாறு அழகு பெற போகிறது என்பது பற்றிய வீடியோ காட்சிகள் மற்றும் படம் விளக்கமும் காட்டப்பட்டது. 

Next Story