கோவில்பட்டி அருகே வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால் ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது


கோவில்பட்டி அருகே வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால் ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு சாவு  தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது
x
தினத்தந்தி 12 July 2018 9:00 PM GMT (Updated: 12 July 2018 12:07 PM GMT)

கோவில்பட்டி அருகே வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால், ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால், ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட ஒப்பந்ததாரர்

கோவில்பட்டி அருகே வாலம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புசாமி (வயது 50). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை ஒப்பந்த முறையில் கட்டிக் கொடுத்து வந்தார். கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சண்முககனி (45).

இவருக்கு கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் ஒப்பந்த முறையில் சுப்புசாமி வீடு கட்டினார். அந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில், சுப்புசாமிக்கு உரிய பணத்தை சண்முககனி கொடுக்க மறுத்தார். மேலும் அவர் சுப்புசாமிக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சுப்புசாமி நேற்று முன்தினம் மாலையில் பாண்டவர்மங்கலத்தில் தான் சண்முககனிக்கு கட்டிய வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய், சப்–இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சுப்புசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, கடிதம் எழுதி தனது சட்டைப்பையில் வைத்து இருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘சண்முககனிக்கு வீடு கட்டியதற்கு அவர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், கொலைமிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சண்முககனிதான் காரணம்’ என்று எழுதப்பட்டு இருந்தது.

பெண் கைது

இதையடுத்து, சுப்புசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்ததாரருக்கு பணத்தை கொடுக்க மறுத்து, கொலைமிரட்டல் விடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சண்முககனியை கைது செய்தனர்.

தற்கொலை செய்த சுப்புசாமிக்கு வேலம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story